Monday, February 26, 2024
Home » இன்று 75வது குடியரசு தின விழா டெல்லியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார் 70,000 வீரர்களுடன் உச்சகட்ட பாதுகாப்பு

இன்று 75வது குடியரசு தின விழா டெல்லியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார் 70,000 வீரர்களுடன் உச்சகட்ட பாதுகாப்பு

by Francis

புதுடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். விழாவையொட்டி டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லி கடமைப்பாதையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரம்பரிய சாரட் வண்டியில் நிகழ்ச்சி நடைபெறும் கடமைப்பாதைக்கு அழைத்து வரப்படுவார்.

அவருடன் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் வருவார். கடமைப்பாதையில் ஜனாதிபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையிலான போர் விமானங்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்படும். ஜனாதிபதி முர்மு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊர்திகளும் இடம் பெறும். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட உள்ளது. 46 போர் விமானங்களின் வான் சாகசம் நடைபெறும். குடியரசு தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடக்கும் கடமைப்பாதை பகுதியில் மட்டும் 14,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள் ளனர்.

 

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi