*வலங்கைமான் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தல்
வலங்கைமான் : 75 ஆண்டு பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டி தர வேண்டும் என்று வலங்கைமான் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள நஞ்சை, புஞ்சை மற்றும் வீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பத்திரப்பதிவு செய்யும் விதமாக சார்பதிவாளர் அலுவலகம் வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடந்த 1947ம் ஆண்டு முதல் வடக்கு அக்கிரஹாரம் பகுதியில் கிழக்கே கீழ விடையல் வருவாய் கிராமத்தையும், மேற்கே ஆவூர் வருவாய் கிராமத்தையும், தெற்கே ஆலங்குடி வருவாய் கிராமத்தையும் உள்ளடக்கியதாக வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆதிச்சமங்களம், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், தொழுவூர், செம்மங்குடி, மேல விடையல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.மிகப் பழமையான கட்டிடத்தில் சுமார் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் பழுதடைந்தது. அலுவலகத்திற்கு கழிவறை முதல் கணினி அறை வரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது. அரசிற்கு பெரும் வருவாய் ஈட்டி தரக்கூடிய பத்திரப்பதிவு துறையில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரக்கூடிய பெரியவர்கள் முதியோர்கள் உள்ளிட்டோருக்கு அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகளும் இல்லாமல் இருந்தது. கட்டிடத்தின் வெளியே திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் மழைக்காலங்களில் பொதுமக்கள் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது .
இந்நிலையில், அலுவலகத்திற்கு என புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்போது கூறப்பட்டது.
மேலும், அலுவலர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் பழுதடைந்த பழமையான கட்டிடத்தின் உறுதித் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள தீபம் ரைஸ் மில் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பழுதடைந்த பழைய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான எவ்வித முன்னெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது .
எனவே பொதுமக்களின் நலன் கருதி, தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.