செய்யாறு, செப்.16: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 75வது நாளாக நடந்த 10 கிராமமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா, நர்மாபள்ளம், குறும்பர், காட்டுகுடிசை வீரம்பாக்கம், தேத்துறை, இளநீர்குன்றம் உள்ளிட்ட 11 கிராம விவசாயிகள் மேல்மா கூட்ரோடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 2ம்தேதி முதல் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், 2,700 ஏக்கர் நிலம் விவசாயம் செய்யும் இடங்களை கையகப்படுத்த கூடாது என்று நடைபயணம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 75வது நாளாக போராட்ட குழு சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். விவசாயி சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் போராட்ட குழு நிர்வாகிகள் அருள், பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பேசினர். இதில் தமிழ்பேரரசு கட்சி பொதுச்செயலாளரும், சினிமா இயக்குனருமான கவுதமன் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார். அப்போது கோட்டை நோக்கி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.