நாமக்கல், ஜூலை 7: நாமக்கல் மாவட்டத்தில் கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற,
75அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்க, தொடக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தேர்வு செய்து, அறிஞர் அண்ணா விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது போன்றவற்றை வழங்கி வருகிறது. மேலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரித்தல், அதாவது தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிக்கும் தன்மை மற்றும் கணிதத்தின் 4 அடிப்படை செயலிகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை திறம்பட கற்று கொடுத்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது. இதற்கு கற்றல் அடைவுக்கான 100 நாள் சவால் என பெயரிடப்பட்டுள்ளது.
நூறு நாட்களில் மேற்கண்ட திறன்களை முழுமையாக பெற்ற மாணவ, மாணவியரை கொண்ட பள்ளிகளை தேர்வு செய்து, அந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளிகளில் 100 நாள் சவால் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பள்ளிகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட தொடக்கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 75 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று திருச்சியில் பள்ளிகல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். விழாவில் எலச்சிபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன், ஆன்றாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன், திம்மராவுத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ராம்பாள், பொம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முகில்மதி, உஞ்சனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை சுமதி ஆகியோர் விருது பெற்றனர். விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட தொடக்கல்வி அலுவலர் பச்சமுத்து பாராட்டினார்.
இது குறித்து விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூறுகையில், ‘மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 85 மாணவ, மாணவியர் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழில் வார்த்தைகளை சரளமாக படிப்பார்கள். எழுதவும் செய்வார்கள். 100 நாட்களில் மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, அவர்களை தயார் செய்துள்ளோம். மேலும் அடிப்படை கணித செயலிகளும் அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.