நாமக்கல், ஜூன் 3: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 726 மாணவியருக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (பொ) விஜயன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, 726 மாணவியருக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்கி பேசியதாவது: அரசு பள்ளியில் படிப்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்ற நோக்கில் ஏழை, எளிய மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் மாணவ, மாணவியருக்கு 13 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலமாக முற்றிலும் இலவசமாக மருத்துவ கல்வி உள்ளிட்ட அனைத்து தொழிற் கல்விகளையும் பயில்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
அரசு பள்ளியில் திறமை வாய்ந்த ஆசிரிய,ஆசிரியைகள் பணியாற்றுவதால், இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இணையாக திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசின் திட்டங்ளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு மாணவச் செல்வங்கள் கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். நிகழ்ச்சிகளில், துணை மேயர் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி, மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் விஜய்ஆனந்த், சகுந்தலா, லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இன்ஜினியர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.