துபாய்: இஸ்ரேல் ஹமாஸ் போரின் ஒருபகுதியாக ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கவும் ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன்படி அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பாகான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. அணுவிஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரித்திருந்தார்.
இஸ்ரேல் ஈரான் அமெரிக்கா நாடுகளின் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உருவானது. ஆனால் கடந்த 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு முன்பாக இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் நாட்டின் சிறை தாக்குதல் நடத்திய செய்தி தற்போது வௌியாகி உள்ளது.
இதுகுறித்து ஈரானின் நீதித்துறை செய்தி தொடர்பாளர் அஸ்கர் ஜஹாங்கிர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எவின் சிறைச்சாலை மீது கடந்த திங்கள்கிழமை(23ம் தேதி) இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் சிறைச்சாலை பணியாளர்கள், காவலர்கள், சிறைக்கைதிகள், கைதிகளை பார்க்க வரும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 71 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.