Tuesday, June 17, 2025
Home செய்திகள்Showinpage 121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9011 கோடியில் 71 குடிநீர்த் திட்டங்கள்

121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9011 கோடியில் 71 குடிநீர்த் திட்டங்கள்

by Francis

4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரக குடியிருப்புகளில் 121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர்த் திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் நிறைவேற்றிவரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர்த் திட்டங்கள் முதலான பல அடிப்படை வசதிகள் காரணமாக தமிழ்நாடு விரைந்து நகர்மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீட்டிலும், பொதுமக்கள் பங்களிப்பு 183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு 12,71,006 மனித நாட்கள் பெறப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீர் கழிக்கும் இடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.6,655.80 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடி மதிப்பீட்டில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.194 கோடியில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.196.56 கோடி மதிப்பீட்டில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டுவதற்கு அனுமதித்து. முதற்கட்டமாக 71 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை 5.1.2024 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் தற்போது 93 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எஞ்சிய 7 மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையங்கள் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு அறிவுசார் தகவல்கள் கிடைக்கவும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதன் மூலம் அறிவுத் திறனை வளர்ப்பதற்கும் நுழைவு வாயில்களாகத் திகழ்கின்றன. பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் மாநகராட்சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகளும், நகராட்சிகளில் ரூ.118.80 கோடியில் 281 புதிய வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 176 பணிகள் முடிவடைந்து மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 905 வகுப்பறைகள் ரூ. 132.66 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109.094 கி.மீ. நீளத்திற்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. பேரூராட்சிகள் ஆணையரகம் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தில் நான்கு ஆண்டுகளில் பேரூராட்சிகளில் ரூ.1,570.84 கோடி மதிப்பீட்டில் 2,937 பணிகளும் நமக்கு நாமே திட்டத்தில் பேரூராட்சிகளில் ரூ.148.37 கோடி மதிப்பீட்டில் 1,287 பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.3057.74 கோடியில் நிறைவேற்றப்பட்ட சாலைப் பணிகள் நபார்டு நிதி, டார்மான்ட் நிதி, மூலதன மான்ய நிதி, தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மாநில நிதிக்குழு திட்டம் ஆகியவற்றின் மூலம் 8065 சாலைப் பணிகள், 3057.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 15வது நிதி ஆணைய மானியத் திட்டத்தின் கீழ் ரூ.121.30 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 213 தேசிய சுகாதார மையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ், 36,581 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், 378 சமுதாய கழிப்பறைகள் 50 பொது கழிப்பறைகள், 185 சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 168 பேரூராட்சிகளில் ரூ.36.96 கோடியில் புதிய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர தேசிய நகர்ப்புர வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 228 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு நகர்ப்புற வீடற்றவர்களுக்கு 4 பேரூராட்சிகளில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் தங்கும் இடங்கள் அமைக்கப்படுகின்றன.

ரூ.1 கோடி மதிப்பீட்டில் வேளாங்கண்ணி பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு தெருக்களில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14,669 வீடுகள் கட்டப்படுகின்றன. அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.114.98 கோடி மதிப்பீட்டில் 663 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில், கடந்த 43 ஆண்டுகளில் முதல் முறையாக நாளொன்றுக்கு சராசரியாக 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழையின்போது தேங்கியிருந்த மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு 73 நீர் உறிஞ்சும் வாகனங்களும், கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்ய 191 ஜெட்ராடிங் இயந்திரங்களும், 45 உறிஞ்சும் திறன் உடைய ஜெட்ராடிங் இயந்திரங்களும், 299 தூர்வாரும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு 2,000 களப்பணியாளர்களைக் கொண்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்வர் தொடங்கி வைக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டங்கள் பெருநகரச் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மாத்தூர், ஜல்லடியான்பேட்டை, ஆலந்தூர், புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, வளசரவாக்கம் மண்டலம், ஆலந்தூர் மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.584 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் ரூ.1043 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் – கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளையும் திறந்து வைத்தார்கள். இத்திட்டங்களால் 40 இலட்சத்து 3 ஆயிரம் குடிமக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் ரூ.1,516.82 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால் 9 லட்சம் குடிமக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிறைவேற்றப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 121.37 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்.
இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழ்நாடு அதிவேகமாக நகரமாயமாகி இந்தியத் திருநாட்டில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டத்தக்கவையாக அமைந்து பத்திரிகைகளாலும், ஊடகங்களாலும் பாராட்டப்படுவதை நம்மால் அன்றாடம் காண முடிகிறது என்பதே உண்மையாகும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi