பாலக்காடு: ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம்திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக் கல்லூரி மைதானத்தில் நேற்று ‘திருவாதிரை’ என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சூர் மாநகராட்சி குடும்பஸ்ரீ அமைப்பை சேர்ந்த 7 ஆயிரத்து 27 பெண்கள் அணிவகுத்து இந்நிகழ்ச்சியில் நடனமாடினர். இந்நிகழ்ச்சி லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மாநில சுற்றுலாத்துறை, திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக இதை கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மேயர் வர்கீஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டேவிஸ் மாஸ்ட்டர், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதஜா, மாநகராட்சி கவுன்சிலர் சியாமளா வேணுகோபால், திருச்சூர் ரேஞ்ச் டிஜிபி அஜிதா பீகம், சிட்டி போலீஸ் கமிஷ்ணர் அங்கிது அசோகன், குடும்பஸ்ரீ மிஷன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதா, குடும்பஸ்ரீ மகளிர், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.