தஞ்சாவூர், ஆக. 30: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் கண்டியூர் கிராமத்தில்மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் ரவிந்திரன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சி குறித்த நோக்கத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் லதா, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார். மேலும் சமூகநல துறையில் அளிக்கப்படும் பல்வேறு திருமண உதவித் திட்டங்கள் குறித்தும் மகளிருக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் லதா விவசாயிகள் கலப்படமற்ற இயற்கையான உரங்களை பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கி விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருவையாறு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிட்டா லூசியா மேரி, குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முதல் ஆயிரம் நாட்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்தே அடித்தளமாகும். எனவே முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதம் முடிந்தவுடன் இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் கூடுதலாக இணை உணவு வழங்க வேண்டும் என்று கூறினார். ஆரோக்கிய குழந்தை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த விளக்க பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணிப்பை விநியோகிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாசிலா ஜாஸ்மின் சாகுல் அமீது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சைய்யது முபாரக், ஊராட்சி மன்ற உறுப்பினர் உஷா முருகேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷினி, தூய்மை இந்தியா இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ஸ்டாலின், மாவட்ட சமூக நல துறை அலுவலர்கள் திருமுருகன் ,அறிவுமணி, ராஜா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பதிவு பெற்ற கலை குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் கண்டியூர் ஊராட்சி செயலர் பாரதி நன்றி கூறினார்.