கும்மிடிப்பூண்டி, ஆக. 26: 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கவரப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் முகம்மது அப்துல்லா வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 505 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி மாணவர்கள் எதிர்கால திட்டத்துடன் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறி பேசினார். இதேபோல் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளை சேர்ந்த 1,300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.