திருச்சி, ஜூலை 1: அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி டிஎன்எஸ்டிசி மண்டல அலுவலகம் முன் நேற்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி, மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் சிராஜூதீன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பணி ஓய்வு பெறுபவர்களை வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பக்கூடாது, கடந்த 2023ம் ஆண்டு முதல் தற்போது வரை ஓய்வூ பெற்றோருக்கு பிஎப் பணிக்கொடை முதலான பணி ஓய்வூ பணப்பலன்களை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850ஐ அமல்படுத்த வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியர்களுக்கு முழுமையாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பிறதுறைகளை போல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைப் பொதுசெயலாளர் ராஜேந்திரன், பூபதி, மண்டல பொருளாளர் ராமசாமி, மாநில துணை செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர். திருச்சி மாநகர கிளை செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.