லக்னோ: தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து அசத்தி வரும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்புடன் இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்தியா இதுவரை விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளது. இதுவரை தோல்வியை சந்திக்காக ஒரே அணி இந்தியாதான். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் 12 புள்ளிகளுடன் இந்தியா கம்பீரமாக முதல் இடத்துக்கு முன்னேறும்.
கேப்டன் ரோகித், கோஹ்லி, கில், ராகுல், ஷ்ரேயாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஷமி, பும்ரா, சிராஜ் வேகக் கூட்டணியும், குல்தீப் – ஜடேஜா சுழலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 4 ஆட்டங்களில் வென்றாலும் கூட… ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை மற்ற அணிகளின் வெற்றி/தோல்விகள் தான் முடிவு செய்யும்.
மூட்டைகட்டுவது அநேகமாக உறுதியாகிவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிகளுக்காக இங்கிலாந்து போராடும் என எதிர்பார்க்கலாம். பட்லர், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, புரூக், ரூட், மலான், வோக்ஸ், வுட் என திறமையான அதிரடி வீரர்கள் அணியில் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் ஒருங்கிணைந்து விளையாடத் தவறுவதே இங்கிலாந்து அணியின் தடுமாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ‘பாஸ்பால்’ என்ற அதிரடி பேட்டிங் பாணி சுத்தமாக எடுபடாததும் அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 6வது வெற்றிக்காக இந்தியாவும், மானம் காக்க நடப்பு சாம்பியனும் வரிந்துகட்டுவதால், லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் நடக்க உள்ள இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.
* இரு அணிகளும் 106 ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளதில் இந்தியா 57-44 என முன்னிலை வகிக்கிறது (3 ஆட்டங்கள் ரத்து, 2 ‘டை’).
* கடைசியாக மோதிய 5 போட்டிகளிலும் இந்தியா 3-2 என முன்னிலை வகிக்கிறது.
* நடப்பு தொடரில் இந்தியா தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, ஆப்கான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி உள்ளது.
* நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி வங்கதேசத்தை மட்டும் வீழ்த்தியுள்ளது.
* உலக கோப்பைகயில் 8 முறை மோதியுள்ளதில் இங்கிலாந்து 4-3 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ‘டை’).
* லக்னோவில் இதுவரை 7 ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன. ஒன்றில் மட்டும் விளையாடி உள்ள இந்தியா (06-10-2022), தென் ஆப்ரிக்காவிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
* இங்கிலாந்து முதல் முறையாக லக்னோவில் களமிறங்குகிறது.
* இங்கு முதலில் பேட் செய்த அணி 3 போட்டியிலும், சேஸ் செய்த அணி 4லும் வென்றுள்ளன.