சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற சுமார் 3.28 லட்சம் மாணவர்கள், உயர்கல்வி படிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தற்போது இந்த திட்டத்துக்கு ரூ.401 நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்’ புதுமைப்பெண் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் பயின்று இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வரையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3.28 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைய உள்ளனர். உயரிய நோக்கம் கொண்ட இந்த திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் பயனாளர் கணக்கெடுப்பின்படி 3,28,159 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர். அதேபோன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையினை தோராயமாக 3,28,000 என கணக்கில் கொண்டு ஒரு மாணவனுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் அளிக்கும் விதமாக ஒரு ஆண்டுக்கு ரூ.393 கோடியே 60 லட்சம் மற்றும் இந்த திட்டத்தினை செயல்படுத்த நிர்வாக செலவினமாக ரூ.7 கோடியே 87 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ.401 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டார்.
கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று 2024-2025ம் நிதியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்த அரசாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என உத்தரவிடப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையினை ‘என்ஏசிஎச்’ மூலம் வழங்குவதற்கு சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இணையதளம் மூலமாக, அதற்கான தீர்வினை சரிசெய்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழி வழியில் 8, 9, 10ம் வகுப்பு பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள். தொலைதூர, அஞ்சல் வழியில், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது. ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.