மதுரை: விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், சார்பில் மதுரை உட்பட 3 மாவட்டங்களில் நான்கு, ஆறுவழிச்சாலை மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், மதுரை அலகின் கட்டுப்பாட்டின் கீழ், திண்டுக்கல் முதல் கோவில்பட்டி வரையிலும், மதுரை முதல் நத்தம் வரையிலும், மேலூர் முதல் காரைக்குடி வரையிலும், திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம், அழகாபுரி வரையிலும், மதுரை வெளிவட்ட சாலை முழுவதும் என மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் 315 கிமீ தூரமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
இச்சாலைகளில் நான்கு வழிச்சாலைகளாக உள்ளவற்றை, ஆறு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்வது, மேம்பாலங்கள் கட்டுவது ஆகியவற்றுடன் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணிகளையும். நெடுஞ்சாலைத்துறையின் மதுரை அலகு செய்து வருகிறது. இவற்றில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாலைகளில், விபத்துக்களை தடுக்க மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், மதுரை அலகு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: 2015 முதல் 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில் மூன்று மாவட்டங்களில் விபத்துக்கள் அதிகம் நடந்த இடங்கள் மற்றும் அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அங்கு மேம்பாலங்கள் கட்டவும், சந்திப்பை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துவரிமான் சந்திப்பில் கட்டப்படவுள்ள ரூ.46.09 கோடி மதிப்பிலான ஆறுவழிச்சாலை மேம்பாலத்துடன், தனக்கன்குளத்தில் ரூ.44.30 கோடியில் ஆறுவழிச்சாலை வடிவிலும், சிவரக்கோட்டை சந்திப்பில் ரூ.26.50 கோடியில் நான்கு வழிச்சாலையாகவும், கள்ளிக்குடி பஜார் சந்திப்பில் ரூ.29.09 கோடியில் நான்கு வழிச்சாலையாகவும், விருதுநகர் மாவட்டம் சூலக்கரை சந்திப்பில் ரூ 45.05 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாகவும் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன.
அதில், ஆறு வழிச்சாலை மேம்பாலங்களின் கீழ் அணுகுசாலைகள் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர, மதுரை மாவட்டம், வடிவேல்கரை சந்திப்பில் ரூ.2.66 கோடியில் சாலை சந்திப்பு விரிவாக்கமும், உயர்கோபுர மின்விளக்குகள் அமைய உள்ளன. விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் ரூ.6.59 கோடியில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலமும், பட்டணம்புதூர் சந்திப்பில் ரூ.1.57 கோடியில் அணுகுசாலையும், புல்லாலக்கோட்டை சந்திப்பிலிருந்து வடமலைக்குறிச்சி சந்திப்பு வரை ரூ.17.87 கோடியில் ஆற்றுப்படுகைகளை கடக்கும் விதமாக சிறிய மற்றும் பெரிய பாலங்களும் கட்டப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், தொனுக்கல் சந்திப்பில் ரூ.74 லட்சத்தில் சாலை சந்திப்புடன் கூடிய உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் சென்டர் மீடியன்கள் அமைப்பது, என்இசி சந்திப்பில் ரூ.3.30 கோடியில் நடைமேம்பாலம் மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டுவது ஆகிய பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை மாவட்டம் தொடர்புடைய பணிகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திலும், மற்ற மாவட்டங்களுக்கான பணிகள் ஜனவரி மாதத்திலும் துவங்கும். இவ்வாறு கூறியுள்ளனர்.