சென்னை: சென்னையிலிருந்து கடந்த 4 நாட்களில் அரசு பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்து துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வாரவிடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தின் வாயிலாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படியும் மற்றும் நேற்று அதிகாலை 2 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும், 936 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி அதிகாலை 2 மணி வரை 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.