தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் குஞ்சரி (68). கூலித்தொழிலாளி. கணவர் இறந்துவிட, 2 மகள்களும் திருமணமாகி வெளியூர் சென்றதால் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கடும் துர்நாற்றம் வீசியது. தகவலின்பேரில், சின்னமனூர் போலீசார் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் குஞ்சரி உடல் அழுகி கிடந்தது. பிரேத பரிசோதனையில் குஞ்சரி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி கல்யாணி வீட்டில் தனியாக இருந்தபோது வாலிபர் ஒருவர் புகுந்து அவரது கழுத்தை நெரித்து நகையை பறிக்க முயன்றுள்ளார். அவர் கூச்சலிடவே அப்பகுதியினர் திரண்டு வந்து வாலிபரை பிடித்து சின்னமனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த தர்(23) என்பதும், குஞ்சரியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவத்திலும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.