தர்மபுரி, ஆக.26: தர்மபுரி மாவட்டத்தில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ், 68 கல்லூரிகளில் படிக்கும் 7,033 மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக ₹1000 பெற்று பயனடைந்து வருகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம், பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல், அரசு பள்ளிகளில் படித்த, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், ”தமிழ்ப் புதல்வன்” எனும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். கோவை அரசு கலைக்கல்லூரியில் கடந்த 9ம்தேதி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி ,அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ₹1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகை ₹1000 பெறுவதற்கான பற்று அட்டைகளை வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், 68 கல்லூரிகளில் படிக்கும், 7,033 மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக ₹1000 பெற்று வருகின்றனர். மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியை சேமிப்பாக வைத்து, மேலும் உயர்கல்விக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
புத்தகங்கள் வாங்குவது, கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி தங்களின் உயர்கல்விக்கு உத்திரவாதமாக இந்நிதியை பயன்படுத்த வேண்டும். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாகுவதற்கு இந்தநிதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நல்ல புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வியை கற்றால், அவர்கள் சுயமாக தொழில் செய்து முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பாகவும், வேலைவாய்ப்பு பெறவும் உறுதுணையாக அமையும். மாணவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம். எளிதில் வெற்றி அடையலாம். எனவே, அரசால் மாதம்தோறும் வழங்கப்படும் ₹1000 உதவித்தொகையை பெற்று கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், 68 கல்லூரிகளில் படிக்கும் 7,033 மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்,’ என்றார்.