சேலம், ஜூன் 16: சேலம் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டில் 6,600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சிறப்பு மேளாக்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி படிப்பை நிறைவு செய்யும் அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வி செல்வதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வியின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல்களுக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை நீக்க, மீண்டும் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தகுதியான மாணவர்கள் அனைவரும் மேற்படிப்பு பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்காக கடந்த ஆண்டு வித்யாலக்ஷ்மி மற்றும் ஜன்சமார்த் ஆகிய இணையதளங்கள் பயன்பாட்டில் இருந்தன. நடப்பாண்டு இந்த இரு இணையதளங்கள் நிறுத்தப்பட்டு, பிரதம மந்திரி வித்யாலக்ஸ்மி என்ற ஒற்றை இணையதளத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த புதிய இணையதளம் எளிமையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில் டிஜிட்டல் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-2026ம் கல்வியாண்டில் 6,600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சிறப்பு மேளாக்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் 860 தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் விநாயகா மிஷன் பவுண்டேசன் ஆகிய 2 கல்வி நிறுவனங்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 109 கல்வி நிறுவனங்களும் அடங்கும். இச்சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்ட, பட்டய மேற்படிப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெற தகுதியானவர்கள். மேலும் இவர்களின் கல்விக்கடனுக்கு எவ்வித பிணையோ, உத்தரவாதமோ வழங்க தேவையில்லை. சேலம் மாவட்டத்தில் கடந்த 2024-2025ம் கல்வியாண்டில், கல்விக்கடனாக ரூ.105 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைவிட கூடுதலாக, கடந்த ஆண்டு 5,415 மாணவர்களுக்கு கல்விக்கடனாக ரூ.110.00 கோடி வரை வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடப்பு 2025-2026ம் கல்வியாண்டில் 6,600 மாணவர்களுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கல்விக் கடன் மேளா விரைவில் தொடங்கப்படவுள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி கல்விக்கடன் பெற தகுதியானவர்கள். குடும்ப வருமானம் ரூ.4.50 லட்சம் வரையுள்ள மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில், தொழில்முறைப் படிப்பிற்காகக் கல்விக்கடன் பெற்றால், அவர்களின் கல்விக்கடனின் ரூ.10 லட்சம் வரையில், படிக்கின்ற காலத்தில் வட்டி மானியம் பெற தகுதியுடையவர்கள். மற்ற படிப்புகளுக்கு பெறப்படும் கல்விக்கடன் தொகைக்கு வட்டி மானியம் 3 சதவீதம் வழங்கப்படுகிறது.
குடும்ப வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கு மேல் ரூ.8 லட்சத்திற்குள் உள்ள மாணவர்கள் பெறும் கல்விக்கடனுக்கு, வட்டி மானியம் 3 சதவீதம் பெற தகுதியானவர்கள். கல்விக்கடனை திருப்பி செலுத்தும் காலம், படிக்கின்ற காலத்துடன், ஓராண்டு நீங்கலாக 15 ஆண்டுகள் வரை செலுத்தலாம். ரூ.7.50 லட்சம் வரை, கல்விக்கடன் பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வித் துறை மூலமாக 75% வரை கல்விக் கடன் உத்ரவாதம் வழங்கப்படுகிறது. பிஎம் வித்யாலஷ்மி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும், வட்டி பானியம் மற்றும் உத்ரவாதத் தொகை பெற தகுதியுடையவர்கள். மேலும் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த பாடப்பிரிவு போன்ற ஏதாவது ஒன்றிற்கு மட்டும் வட்டி மானியம் மற்றும் உத்தரவாதம் பெற தகுதியுடையவர்கள். மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.