திருச்சி, நவ.20: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்களை, திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியிலுள்ள ஒரு மளிகை கடையில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த 65 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் சுடலைமணி ஆகியோரை பொன்மலை போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் உணவுப்பொருட்கள் கலப்படம் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட அளவிலான புகார் எண்:96268 39595 மாநில அளவிலான புகார் எண்:94440 42322 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.