புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ள நிலையில், அந்த விபத்துகளால் 781 பேர் பலியானதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் எம்பி அரவிந்த் சாவந்தின் கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2014-15ம் ஆண்டில் 135 ரயில் விபத்துகளும், 2015-16ம் ஆண்டில் 107, 2016-17ம் ஆண்டில் 104, 2017-18ம் ஆண்டில் 73, 2018-19ம் ஆண்டில் 59, 2019-20ம் ஆண்டில் 55, 2020-21ம் ஆண்டில் 22, 2021-22ம் ஆண்டில் 35, 2022-23ம் ஆண்டில் 48 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரயில் விபத்துகளால் 781 பேர் இறந்துள்ளனர். அதே காலகட்டத்தில் 1,545 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரயில் விபத்துகளின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 171 ஆகவும், அதே 2014 முதல் 2023ம் ஆண்டு வரையிலான ரயில் விபத்துகளின் ஆண்டு சராசரி எண்ணிக்கை 71 ஆகவும் பதிவாகியுள்ளது. ரயில் பாதை சீரமைப்பு, சிக்னல் அமைப்பு, இன்ஜின் போன்றவற்றை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2017-18 முதல் 2021-22ம் ஆண்டு வரை தேசிய ரயில் பாதுகாப்பு நிதியின் பணிகளுக்காக ரூ.1.08 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 2023 மே 31ம் தேதி வரை 6,427 நிலையங்களில் சிக்னல்கள் மற்றும் பாயிண்டுகள் இயக்கத்துடன் கூடிய மின்சாரம் மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. லெவல் கிராசிங் கேட்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடந்த மே 31ம் தேதி வரை 11,093 லெவல் கிராசிங் கேட்களில் இன்டர்லாக் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று அதில் தெரிவித்துள்ளார்.