பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் – அன்பரசி தம்பதி மகள் சுசிஷாலினி (15). பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சுசிஷாலினி, தனது அண்ணனும், கராத்தே பயிற்சியாளருமான குலாஸ்டாலினிடம் கராத்தே பயிற்சி பெற்றார். தொடர்ந்து சுசிஷாலினி, பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளையில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நேற்று தனது சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
அவர் வயிற்றில் மரப்பலகையை வைத்து தொடர்ச்சியாக 8 நிமிடம் 32 வினாடிகளில் 62 முறை டூ வீலரை ஏற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார். 30 முறை மட்டுமே டூ வீலரை வயிற்றில் ஏற்றி இறக்கும் திட்டமாக இருந்தது. ஆனால் மாணவி சுசிஷாலினியின் ஆர்வத்துடன், பொதுமக்களின் உற்சாகமும் சேர்ந்ததால் தொடர்ந்து இடைவிடாது இரு மடங்காக 62 முறை ஏற்றி இந்த உலக சாதனையை மாணவி சுசிஷாலினி செய்து முடித்தார். மாணவி சுசிஷாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.