மஞ்சூர் : குந்தா தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ தலைமையில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் மகளிர் உரிமை தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளிலும் நேற்று வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்றது.
குந்தா தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய கூட்டத்திற்கு ஊட்டி கோட்டாட்சியர் சதீஷ் தலைமை தாங்கினார். குந்தா தாசில்தார் சுமதி வரவேற்றார். துணை வட்டாட்சியர் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதி,வட்ட வழங்கல் அலுவலர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று குந்தா உள்வட்டத்திற்கான கீழ்குந்தா-1, கீழ்குந்தா-2, கிண்ணக்கொரை, பாலகொலா-1, பாலகொலா-2, மற்றும் மேல்குந்தா உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மேற்கண்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தார்கள்.
பெரும்பாலும் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை வழங்க கோரி ஏராளமானோர் மனு கொடுத்தனர். இதேபோல் வீட்டுமனைபட்டா, குடிநீர், சாலை வசதி, தடுப்புச்சுவர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரியும் பொதுமக்கள் தரப்பில் இருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆர்.டி.ஓ.சதீஷ் அறிவுறுத்தினார். கூட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, துணை தலைவர் நேரு, வருவாய் ஆய்வாளர் அனுராதா, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகனபிரியா, உமாபிரியா, ராஜேஷ்வர்மா, சுனில்குமார், கவுசிக், கெஜலட்சுமி மற்றும் கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் மின்வாரியம், வனம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக நில அளவை செய்ய உபயோகப் படுத்தபடும் உபகரணங்களை ஆர்.டி.ஓ சதீஷ் பார்வையிட்டார்.
அதன் உபயோக முறைகளை அலுவலர்கள் விளக்கினர். தொடர்ந்து 2வது நாளாக இன்று(10ம் தேதி) இத்தலார் உள்வட்டத்திற்குட்பட்ட இத்தலார்,பிக்கட்டி மற்றும் முள்ளிகூர் பகுதிகளுக்கான வருவாய் தீர்வாய கூட்டம் குந்தா தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.