சென்னை: நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து அண்ணா சாலை அருகில் ஜெயப்பிரதா என்ற திரையரங்கை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதில் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெயப்பிரதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயப்பிரதா தரப்பில், 20 லட்ச ரூபாயை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.