*விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்கள், தென்னைகள் சேதம்
கடையம் : கடையம் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவார கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு பொதுமக்களை அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
கடையம் அருகே பங்களா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பேச்சி முத்து. இவருக்கு கடனா நதி அணைக்கு செல்லும் வழியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது வயலில் காவல் பணியில் இருந்தபோது குட்டியுடன் 6 காட்டு யானைகள் மலையடிவாரம் வழியாக தோட்டத்தில் புகுந்துள்ளது.
அங்கிருந்த தடுப்பு கம்பி வேலிகளை சேதப்படுத்தி வயலுக்குள் புகுந்து வயலில் பயிர் செய்யப்பட்டிருந்த நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி வந்த நெல்லை சேதப்படுத்தியது. மேலும் அருகில் உள்ள ஜோசப் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து 10 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. காவலில் இருந்த விவசாயிகள் ஒன்றிணைந்து டார்ச் லைட் அடித்தும், சத்தம் எழுப்பியதால் அங்கிருந்து யானைகள் வனப்பகுதியை நோக்கி சென்றது.
நேற்று முன்தினம் கருத்தபிள்ளையூர் பகுதியில் புகுந்த காட்டு யானை கூட்டங்கள் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்றும் விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து அடம் பிடித்து வருகிறது. இந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்ைல.
இதனால் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனிடையே சேதமடைந்த பயிர்களை தகவலின் பேரில் வருவாய்த்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது சேதமான பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை
இதுகுறித்து அரசபத்து விவசாய சங்க தலைவர் கண்ணன் கூறுகையில் ‘அறுவடை காலங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைகள் மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் தான் உள்ளது. அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.