குடியாத்தம், அக்.18: குடியாத்தம் அருகே கடையில் சாம்பிராணி புகை போட்டு 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சித்தூர் வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெத்தபஞ்சானி பகுதியை சேர்ந்தவர் காலேசா(25). இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். மேலும், குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகை போடும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், காலேசா நேற்று குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகைப்போட சென்றார். அப்போது, ஒரு கடையில் தனியாக இருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே, சிறுமி கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து காலேசாவை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷாமிலா, காலேசா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.