வேலூர், ஆக.12: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 6 மாதங்களில் விதிமுறையை மீறி செயல்பட்டதாக 17 மருந்து கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 கடைகளின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இளைஞர்கள், போதைக்காக தூக்க மாத்திரை உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஒரு சில மருந்துகடைகளிலும் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவில் வாங்கி, உரிய ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து மருந்து கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமின்றி கடையின் உரிமம் ரத்து செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை விற்கும் மருந்து கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 6 மாதத்தில் விதிமுறையை மீறி செயல்பட்ட 17 மருந்து கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விதிமுறையை மீறி செயல்பட்ட 17 மருந்து கடைகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 கடைகளின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி ஒரு சில மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 6 மாதத்தில் 17 கடைகக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துாக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரை விற்றதாக 11 மருந்து கடைகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 கடைகளின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நீதிமன்றத்தில் 135 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.