கடலூர், டிச. 9: கடலூர் தேவனாம்பட்டினம் முகத்துவார பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 32 எருமை மாடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டதில், ஒரு மாடு மட்டும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த கேசவன், கண்ணையன், குணா, மனோகர் உள்ளிட்ட 7 பேரின் 60க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் தேவனாம்பட்டினம் முகத்துவார பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன.
அப்போது கெடிலம் ஆற்றின் நீர் கடலில் வடிவதற்காக வெட்டப்பட்ட முகத்துவாரத்தில் மாடுகள் இறங்கி உள்ளன. ஆனால் தண்ணீரின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 32 மாடுகள் இதில் அடித்து செல்லப்பட்டன. இதில் ஒரு மாடு மட்டும் கடந்த 6 நாட்களாக, கடலில் தத்தளித்து வரும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தாழங்குடா பகுதி மீனவர்கள், அந்த மாடுக்கு குடிக்க தண்ணீர் வழங்கியதாக கூறப்படுகிறது.
9 கடல் மைல் தூரத்தில் தத்தளிக்கும் அந்த மாட்டை மீட்க பெரிய அளவிலான படகு இல்லாததால் மீனவர்கள் அந்த மாட்டை மீட்க முடியாமல் திரும்ப வந்துள்ளனர். எனவே அந்த எருமை மாட்டை மீட்க மீன்வள துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.