குடியாத்தம், ஜூன் 17: குடியாத்தம் அருகே கொட்டகைக்குள் புகுந்து 6 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்த சிறுத்தைகள் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை கடித்து குதறி விடுகிறது. இந்நிலையில் குடியாத்தம் அடுத்த வீரிச்செட்டிபல்லி கிராமத்தில் மூர்த்தி என்பவர் 12 ஆடுகளை வளர்த்து வந்தார். இவற்றை வனப்பகுதியையொட்டியுள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது 6 ஆடுகள் கழுத்து, கால்கள், வயிறு பகுதிகளில் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. அதனை சிறுத்தை கடித்துக்கொன்றிருக்கலாம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் வனத்துறையினர் கூறுகையில் ‘வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரிகிறது. எனவே பொதுமக்கள் விறகு சேகரிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கோ ஓட்டிக்கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தையா அல்லது வேறு ஏதாவது விலங்கா என விரைவில் கண்டுபிடித்து அவற்றின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்’ என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.