திருமலை: திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை தலைவர் சுப்பாராயுடு, எஸ்.பி பி.நிவாஸின் மேற்பார்வையில் போலீசார் அவ்வபோது அதிரடி சோதனை நடத்தி, செம்மரக்கட்டை கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பதி அடுத்த கிருஷ்ணாபுரம் பிரிவு, கரகம்பாடி வனப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையின் போது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமன் அன்பு என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமன் அன்புவிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. நீதிபதி நரசிம்ம மூர்த்தி இருதரப்பு வாதங்களையும் விசாரித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், செம்மரக்கட்டைகளை கடத்திய பரமன் அன்புவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அவரை போலீசார் நெல்லூர் மத்திய சிறையில் அடைத்தனர்.