சென்னை: மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படும் 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 5 மாநில தேர்தல் முடிவு வந்த பிறகு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளை பாஜ தொடங்க உள்ளது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்துக்கு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகிறார். ராமேஸ்வரத்தில் பாம்பன் பால பணிகள் முடிவடைந்தநிலையில், அந்த பால திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதோடு, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக வெளியேறி விட்டது. தற்போது பாஜ கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன. வாசனின் தமாகா, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. எந்தப் பக்கம் போகலாம் என்று மதில் மேல் பூனை போல பாஜவினர் உள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பினார். இதற்காக பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் சீமான், கூட்டணிக்கு மறுத்து விட்டார்.இதனால் பாமக மற்றும் தேமுதிக மட்டும் எந்தப் போகலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கட்சிகள் பாஜக பக்கம் வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் தமிழகத்தில் கூட்டணியை உறுதி செய்ய பிரதமர் மோடியின் பயணத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 5 மாநில தேர்தலில் பாஜவுக்கு சாதகமான முடிவு வந்தால், அதிமுக மீண்டும் பாஜ கூட்டணியில் இடம் பெறும் என்று மேலிட தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பிரதமர் மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி வந்து சந்திக்க ஏற்பாடு செய்யும்படி தமிழக பாஜக பொறுப்பாளர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை 5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவினால் அதிமுக கண்டிப்பாக கூட்டணிக்கு வராது. அப்படியென்றால் அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் மோடியின் பயணம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சியின் தலைவர்களை அவர் சந்திப்பாரா? யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்பது அப்போது உறுதியாகிவிடும் என்பதால் புதிய அரசியல் எதிர்பார்ப்புகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.