புதுடெல்லி: ஐந்து மாநில சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மபி,ராஜஸ்தான்,மிசோரம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவ.30ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு இருகட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17 அன்றும் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 அன்று நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன. இந்த நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 13ம் தேதி தொடங்கி விட்டது. பா.ஜ சார்பில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 85 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் காங்கிரஸ் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. முன்னோர்களை நினைத்து வழிபடும் மகாளய அமாவாசை வரை காத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று மகாளய அமாவாசை முடிந்து விட்டதால் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. மபியில் முதற்கட்டமாக 144 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இறுதி செய்து வைத்துள்ளது. அதே போல் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.