கோவை: லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார் காரணமாக கோவையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகரில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கமிஷனர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் போலீசார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மணிகண்டன், செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு வடிவேலு, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு கபூர், போலீஸ்காரர் வினோத், வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்ட நபர்களிடம் லஞ்சம் வாங்கியது, சரக்கு வாகனங்களில் பணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் புகார்தாரர்களிடம் லஞ்சம் பெற்றது, குற்ற நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது போன்ற பல முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.