இம்பால்: மணிப்பூரில் கடந்த 3 நாட்களில் பழங்குடியின பாடலாசிரியர் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இரு குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடக்கிறது. மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளதாக கூறப்பட்டாலும் கூட, அவ்வப்போது மோதல்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மாவட்டங்களில் மட்டும் குகி – மெய்டீஸ் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பழங்குடியினப் பாடலாசிரியர், கிராம பாதுகாப்பு தன்னார்வலர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘இரு குழுக்களுக்கு இடையே நடந்த இடைவிடாத துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆறு முதல் ஏழு பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளது. இதுவரை 5 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பாடலாசிரியர் மங்போய் லுங்டிம் (50) அடங்குவார். இவர் தான் கடந்த மே 3ம் தேதி மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்த போது, ‘இது எங்களது நிலம் இல்லையா?’ என்ற பாடலை இயற்றி பாடினார். அவரது ெபரும்பாலான பாடல்கள் பழங்குடியின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இருந்தது. நேற்று லீமாகோங் அருகே தீவைப்பு முயற்சிகள் நடந்தது. அதனை ராணுவம் முறியடித்தது. பல்வேறு இடங்களில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, 20 வெடிகுண்டுகள், மூன்று கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், 20 வெவ்வேறு வகையான வெடிமருந்துகள் ஆகியன மீட்கப்பட்டன’ என்று கூறினர்.