திருவள்ளூர், மே 8: திருவள்ளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக 495 பயனாளிகளுக்கு ₹1.84 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் 100 பயனாளிகளுக்கு ₹1 லட்சம் மதிப்பீட்டிலான முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 595 பயனாளிகளுக்கு ₹1.85 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, தனித் துணை கலெக்டர் மதுசூதனன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வட்டாட்சியர் மதியழகன், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் 2 ஆண்டு காலமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொன்னதையும், சொல்லாததையும் இந்நாட்டு மக்களுக்காக நல்லதொரு திட்டங்களை அறிமுகப்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நிதி நிலை அறிக்கையில் ₹62 ஆயிரம் கோடி நிதிசுமை வைத்து சென்றனர். ஆனால், தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் ₹32 ஆயிரம் கோடியாக குறைத்து, இந்த ஆண்டு ₹30 ஆயிரம் கோடியாக்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும். அடுத்த ஆண்டு இன்னும் நிதி நிலை சுமை குறையும். தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சிற்றுண்டி திட்டம் இந்தியாவில் எந்த முதல்வருக்கும் ஏற்படாத ஒரு புதிய யுக்தியாகும். பள்ளி கல்விக்கு இந்த ஆண்டு ₹43 கோடியும், உயர் கல்விக்கு ₹19 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மேலும் இலங்கை தமிழ் மக்களின் வீட்டு வசதிக்காகவும், தேவையான ரேஷன் பொருட்களுக்காகவும் ₹325 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.