நாகர்கோவில்: கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதைக்கு மேலும் ரூ.575 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் ரயில்வே வழித்தடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை ரயில்பாதை பணிகள் தொடங்கின. 87 கி.மீ தூரம் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 37.59 ஹெக்டரும், பாறசாலை முதல் கன்னியாகுமரி வரை தமிழக பகுதியில் 51.04 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே தமிழ்நாடு பகுதியில் இந்த பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெற்று வருகிறது. கேரளாவில் 38 சதவீதமும், தமிழ்நாட்டில் 14 சதவீதமும் நில ஆர்ஜிதம் நடந்து முடிந்து இருந்தது. கேரள பகுதியில் நில ஆர்ஜிதத்துக்கு ரூ.1312 கோடியும், தமிழ்நாடு பகுதிக்கு ரூ.298.57 கோடியும் ரயில்வே வழங்கி இருந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்தநிலையில் கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிக்கு மேலும் ரூ.575 கோடி தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரயில்வே துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில்பாதை இரட்டை ரயில்பாதைக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.365 கோடியுடன் மேலும் ரூ.575 கோடி ரயில்வே வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு மொத்தம் ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 30 கி.மீ கேரள பகுதியில் 2வது ரயில்பாதை அமைக்க டென்டர்கள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
நேமம் முதல் பாறசாலை வரை நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் செப்டம்பர் முதல் வாரம் நிறைவு பெறும். நேமம் டெர்மினல் பணிகளும் இதனுடன் சேர்த்து நடைபெற்று வருகிறது. கேரளா- தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில்பாதைக்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் முதல் நேமம் வரையுள்ள 2ம் ரயில்பாதையும், நேமம் டெர்மினலும் 2026 மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. நேமம் ரயில் நிலையத்தில் 4 பிளாட்பார்ம்கள், 2 பிட்லைன்கள், 4 ஸ்டேபிளிங் லைன்கள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 13 பாலங்களும் புதுப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திடீர் கரிசனம் ஏன்?
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதே வேளையில் கன்னியாகுமரி -திருவனந்தபுரம் ரயில்பாதைக்கு மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக நேமம் டெர்மினல், அது தொடர்பான பணிகள், நேமம் – திருவனந்தபுரம் இடையேயுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விழிஞ்ஞத்தில் திறக்கப்பட்டுள்ள அதானி துறைமுகம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. துறைமுகத்திற்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் ஒன்றிய அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தையொட்டி அமைக்கப்பட உள்ள சுரங்க ரயில்பாதைக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும். இதற்காக ரூ.1200 கோடி செலவிடப்படும். விழிஞ்ஞம் முதல் நேமம் அருகில் உள்ள பாலராமபுரம் வரை 10.7 கி.மீ நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் இரட்டை ரயில்பாதை பணிகளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.