லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஐந்து பேர் உயிரிழந்தனர். மீரட், கவுதம் புத்த நகர் மற்றும் புலந்த்ஷஹர் ஆகியவற்றிலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரங்கள் வேரோடும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, வீடுகள் இடிந்து விழுந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன. மின்சார விநியோகமும், ரயில் சேவைகளும் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் வழங்கப்பட உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் புயல் தொடரும் என்று எச்சரித்துள்ளது. இயற்கை பேரிடரால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.