புதுடெல்லி, ஆக.3: கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு உள்பட மேற்கு தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கிமீ பகுதியை சுற்றுசூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, வயநாட்டில் கடந்த 30ம் தேதி கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 340 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்,வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 56 ஆயிரத்து 800 சதுர கிமீ-ஐ சுற்றுசூழல் உணர்திறன் பகுதி என ஒன்றிய அரசு வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு நாளைக்கு பின் இது வெளியிடப்பட்டுள்ளது. இதில், வயநாட்டின் 2 தாலுகாக்களை சேர்ந்த 13 கிராமங்களும் இதில் அடங்கும். இந்த உத்தரவின்படி சுரங்கம்,குவாரி, மணல் அள்ளுதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்.
தற்போதுள்ள சுரங்கங்கள் ஐந்தாண்டுகளுக்குள் இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து அல்லது தற்போதுள்ள சுரங்க குத்தகை காலாவதியாகும் வரை, எது முன்னதாகவோ படிப்படியாக அகற்றப்படும். புதிய அனல் மின் திட்டங்கள் தடை செய்யப்படுகிறது. தற்போதுள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படலாம், ஆனால் விரிவாக்கம் அனுமதிக்கப்படாது. பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் மற்றும் டவுன்ஷிப்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் செய்யலாம். மருத்துவமனைகள் செயல்படலாம்.ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.