*ஓட்டுநர், நடத்துநர்களை மாணவர்கள் கவுரவித்தனர்
கோபி : கோபி அருகே உள்ள சைபன்புதூர் கிராமத்தில் 51 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு முதன் முறையாக அரசு பேருந்து இயக்கப்பட்டதை தொடர்ந்து, பேருந்தில் அழைத்து வந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாணவ, மாணவிகளே பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட சைபன் புதூர் கிராமமானது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கடந்த 1973ம் ஆண்டு அரசு பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு சைபன்புதூரில் இருந்து மட்டுமின்றி வரப்பள்ளம், சேட்டுகாட்டுபுதூர், அண்ணாநகர், எரங்காட்டூர், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்தாலும், அவர்கள் வந்து செல்வதற்கு உரிய பேருந்து வசதி இல்லாத நிலை இருந்தது. பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் சேர்க்கை படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரப்பள்ளம் வழியாக சைபன்புதூர் பள்ளி வரை ஒரு பேருந்து இயக்கப்பட்டது.
ஆனால் கருப்பணகவுண்டன்புதூர், அண்ணாநகர் பிரிவு, சேட்டுகாட்டுபுதூர், சைபன்புதூர் பிரிவு வழியாக பள்ளி வரை பேருந்து வசதி இல்லாத நிலையில் இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்து ஒன்றை காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரம் மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் இயக்க கிராம மக்கள் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை, அவர் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமியின் உத்தரவை தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நாள்தோறும் காலையில் அத்தாணியில் இருந்து கள்ளிப்பட்டி வழியாக கோபி செல்லும் பேருந்து ஒன்றை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வரை இயக்கவும், வழித்தடத்தை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து 51 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இயக்கப்பட்ட பேருந்தில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், பள்ளி முன்பு காத்திருந்த பெற்றோர்கள், கிராம மக்கள் முன்னிலையில் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும், நடவடிக்கை எடுத்த ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் ஆகியோருக்கும் மாணவ, மாணவிகளே பொன்னாடை அணிவகுத்தும், இனிப்பு வழங்கியும் மரியாதை செலுத்தினர்.
100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்த இந்த பள்ளியில் தற்போது 50 மாணவர்களே உள்ள நிலையில், பேருந்துகள் இயக்கப்பட்டதால் இனி வரும் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என பெற்றோர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளிக்கு பேருந்து இயக்கப்பட காரணமாக இருந்த தமிழக அரசுக்கும் நடவடிக்கை எடுத்த அமைச்சர் முத்துசாமிக்கும், மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெகநாதன், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜோதிலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.