நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாணவரணி, இளைஞரணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை வகித்தார். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அருண் காந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் சி.டி சுரேஷ், செந்தில் குமார், பிரிட்டோசேம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது: சென்னையில் நாளை (21ம் தேதி) நீட் தேர்வை எதிர்த்து 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து மாணவரணி, இளைஞரணி, மருத்துவர் அணியினர் பொது மக்களிடம் கையெழுத்து பெறுகின்றனர். இதில் மொபைல் எண் உடன் கையெழுத்து பெறப்படும். சென்னையில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 72 மாவட்டங்களில் திருமண மண்டபங்களில் காணொளி மூலம் 3 அணிகளும் பங்கேற்கும். பின்னர் மாநில தலைமையால் அனுப்பி வைக்கப்படும் சிறப்பு பேச்சாளர் பேசுவார். இதில் அனைத்து திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.