புது டெல்லி: வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் யூடியூப் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்து ஒன்றிய அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடம் உள்ள இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இந்த வீடியோ மக்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. ஒன்றிய அரசு இந்த தகவல் போலியானது என்றும், ரிசர்வ் வங்கி இத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது. ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்படவில்லை, அவை சட்டப்பூர்வமானவை. தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம். செய்திகளை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும்’ என்று தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? ஒன்றிய அரசு திடீர் விளக்கம்
0
previous post