தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டரணை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தானிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், எஸ்.ஐ அருள்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் கரும்பு தோட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டு அதில் சுமார் 5000 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஊறலை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர். மேலும், சாராய ஊறலை பதுக்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.