போச்சம்பள்ளி, செப்.21: போச்சம்பள்ளி அருகே, மஞ்சமேடு அணையில் 500 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி, சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டது. போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 அடி முதல் 18 அடி உயரம் வரை, சுமார் 500க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து கொழுக்கட்டை, சுண்டல், அவல் பொறி, தேங்காய், புட்டு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடினர். நேற்று 3ம் நாள், விநாயகர் சிலைகளை பூஜை செய்து போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றிற்கு டெம்போ லாரி, கார் டூவீலர்கள் மூலம் காலை முதலே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பொது மக்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக எடுத்து வந்து ஆற்றில் கரைத்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. இதனையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பர்கூர் டிஎஸ்பி மனோகரன் தலைமையில், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி, பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர். மேலும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வீரர்கள், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.