திருவள்ளூர், ஜூன் 17: திருவள்ளூரில் 5 வழித்தடங்களில் மினி பஸ் சேவையை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை தஞ்சாவூரில் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவள்ளூர் மாட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களில் மினி பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி துரை சந்திரசேகர், நகர மன்ற தலைவர் உதயமலர், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கும் பொருட்டு, அதற்கான அறிவிக்கை திருவள்ளூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, 49 வழிதடங்களில் இயக்குவதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூர், பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்பட்டது. 49 வழிதடங்களில் மினி பேருந்துகளை இயக்க 146 விண்ணப்பங்கள் வரப்பெற்று, அவைகளில் 76 விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட கலெக்டரால் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்பட்ட வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், பொது மக்கள் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களான திருத்தணி அடுத்த இஸ்லாம் நகர் முதல் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வரை, செங்குன்றம் பேருந்து நிலையம் முதல் வெளி வட்ட சாலை புழல் முகாம் வரை, பூந்தமல்லியில் மூன்று சேவைகளும், ஆவடி முதல் கன்னடபாளையம் வரை, திருநின்றவூர் பேருந்து நிலையம் முதல் செங்குன்றம் வரை என முதற்கட்டமாக 5 வழித்தடங்களுக்கான சேவை பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழித்தடங்களுக்கான சேவைகளை படிப்படியாக தொடங்கி வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நாசர் பேசினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (திருவள்ளூர்) என்.ராமகிருஷ்ணன், (பூந்தமல்லி) வி.ரவிக்குமார், (செங்குன்றம்) வி.சிவானந்தம், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.