வந்தவாசி, நவ.23: வந்தவாசி அருகே 5 மகள்களின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்செம்பேடு பழவந்தாங்கல் ஓடை பகுதியை சேர்ந்தவர் ெவங்கடேசன்(54), விவசாயி. இவரது மனைவி பொன்னம்மாள். தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. வெங்கேடசனுக்கு கிட்னியில் கல் இருந்ததால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் கல் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வெங்கடேசன் கடந்த 19ம் தேதி கொவளை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு கிட்னி கல் அடைப்பு காரணமாக கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசன், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கிக்கொண்டு அதில் விஷத்தை கலக்கி குடித்துள்ளார். இதனால் மயங்கி கிடந்த வெங்கடேசனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பொன்னம்மாள் நேற்று கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.