கரூர், ஆக. 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் குணசேகர், குமரேசன், இளமதி, வெண்ணிலா உட்பட அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் கருணாகரன் கலந்து கொண்டனர்.
பிற சங்க நிர்வாகிகள் விஜயகுமார், கண்ணன், பாபு, சிங்கராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில பொருளாளர் நாகப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் புஷ்பவள்ளி நன்றி கூறினார்.
இதில் அரசாணை எண் 33ல் உரிய திருத்தம் மேற்கொண்டு, தொடர்ந்து கருணை அடிப்படையிலான பணி நியமனம் கிராம உதவியாளர்களுக்கு வழங்கவேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா இறுதித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.