தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், 888 வாக்குச்சாவடி மையங்களில் 1489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1500க்கும் அதிகமான வாக்காளர்கள் இருந்தால், அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, கடந்த 20ம்தேதி முதல் வீடு வீடாக தொடங்கியது.
அக்டோபர் 18ம் தேதி வரை நடக்கும் இப்பணிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் 1489 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், கடந்த 20ம்தேதி முதல் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் மேற்கொள்ள, 2024 வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இப்பட்டியலை கலெக்டர் சாந்தி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது, திமுக வக்கீல் தாஸ், அதிமுக சுப்பிரமணியம், பாஜக வெங்கட்ராஜ், சிபிஐ சுதர்சனன், சிபிஎம் குப்புசாமி மற்றும் அரசியல் கட்சியினர், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி, வில்லியம் ராஜசேகர், தேர்தல் தாசில்தார் அசோக்குமார், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உடனிருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 12 லட்சத்து 62 ஆயிரத்து 409 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 38 ஆயிரத்து 34 பேர், பெண் வாக்காளர் 6 லட்சத்து 24 ஆயிரத்து 210 பேர், பிற பாலினத்தவர் 165 பேர் என 5 தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 42 ஆயிரத்து 825 பேர் உள்ளனர். ஐந்து தொகுதிகளிலும், மொத்தம் 888 வாக்குச்சாவடி மையங்களில் 1489 வாக்குச்சாவடிகள் உள்ளன. தொகுதி வாரியாக பாலக்கோடு 272, பென்னாகரம் 294, தர்மபுரி 308, பாப்பிரெட்டிப்பட்டி 314, அரூர் (தனி) 301 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாக இருப்பின், அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும். வாக்குச்சாவடியை பிரிக்க வேண்டிய சூழ்நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கான புதிய வாக்குச்சாவடியாக அமைக்கப்படுமே தவிர, துணை வாக்குச்சாவடியாக அமைக்கப்படாது.
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாலுகா அலுவலகங்களில் நேற்று (29ம்தேதி) முதல் வரும் 4ம்தேதி வரை, எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட வேண்டும். கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஏதேனும் வரப்பெற்றால், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான இனங்களாக இருப்பின் அக்கோரிக்கைகள் ஏற்கப்படும்.
இவ்வாறு தொகுதி வாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, இறுதியாக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கலந்தாலோசித்து இறுதி செய்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.