புதுடெல்லி: பொருளாதார குற்றவாளிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களிடம் இருந்து ரூ.14,977 கோடி மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சிபிஐ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணியாளர் ஒன்றிய நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்தி சிங் கூறுகையில்,‘‘பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களை நாடு கடத்துவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 19 குற்றவாளிகள், தப்பியோடியவர்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சராசரியாக ஆண்டுக்கு 10 பேர் இந்தியாவிற்கு திரும்புள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 18 ஆகவும் கடந்த ஆண்டு 27ஆகவும் இருந்தது. 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14977கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.