சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நான்காண்டு நிறைவடைந்ததையொட்டி, கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துறை வாரியாக தொகுத்து, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் ’தமிழரசு’ சார்பில் நான்காண்டு சாதனை மலர் ஒன்றினை தயாரித்துள்ளது. இந்த சாதனை மலரில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகள் இடம் ெபற்றுள்ளன. அதன்படி, ”தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”, “மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி”, “அறம் காக்கும் ஆட்சி”, “ஓர் ஏர் உழவர் காக்கும் அரசு”, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
“தொழில் பெருகும் தமிழ்நாடு”, “இந்தியாவின் விடியல் பயணத்தால் வழிகாட்டும் தமிழக ஊரக மேம்பாட்டு திட்டங்கள்”, “தமிழ்நாடு; உயர்கல்வியில் முதலிடம் அறிவுப் புலத்தின் புகழிடம்” என்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், “இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு”, “விளையாட்டல்ல நிஜம் கனவுகள் நனவாகின்றன!”, “எல்லார்க்கும் எல்லாம்: தமிழ்நாட்டின் சுகாதார பெருவழி” ஆகிய கட்டுரைகளும் மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், திட்டங்களின் பயன்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
இந்த நான்காண்டு சாதனை மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்த செம்மொழி நாள் விழாவில் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.