தண்டையார்பேட்டை: பேருந்தின் மீது ஏறி ரகளை செய்த 4 கல்லூரி மாணவர்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி நூதன தண்டனை வழங்கினார். வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற மாநகர பேருந்தில், வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஏறினர். இவர்கள், பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, தியாகராயா கல்லூரிக்கு ஜே… தியாகராயா கல்லூரி புள்ளிங்கோவுக்கு ஜே… என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேருந்து டிரைவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதன்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகளையில் ஈடுபட்ட பிரவீன் (19), பிரவீன்குமார் (19), ஜோசப் (19), கோகுலகிருஷ்ணன் (19) ஆகிய 4 மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இவர்கள் தியாகராயா கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருவது தெரிந்தது. இவர்கள் மீது வழக்கு பதிந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும், என கருதிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் 4 பேரும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து காலை, மாலை என தொடர்ந்து 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும், என்ற நூதன தண்டனையை துணை ஆணையர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மூலக்கொத்தளம், தங்க சாலை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் போக்குவரத்து காவலருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டனர்.