Thursday, March 28, 2024
Home » 4 தண்டவாளம், 3 ரயில்கள், 20 நிமிடம், 2000 பயணிகள் எப்படி நடந்தது கோர விபத்து? பதற வைக்கும் பயங்கர காட்சிகள்

4 தண்டவாளம், 3 ரயில்கள், 20 நிமிடம், 2000 பயணிகள் எப்படி நடந்தது கோர விபத்து? பதற வைக்கும் பயங்கர காட்சிகள்

by Karthik Yash

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து நடந்துள்ளது. எப்படி நடந்தது இந்த கோரம்? இந்த கேள்வி தான் இன்று அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. அந்த பகுதியில் 4 தண்டவாளங்கள் உள்ளன. லூப் லைனில்(கிளைப்பாதையில்) சரக்கு ரயில் நின்று கொண்டு இருக்கிறது. மாலை 6.50 மணிக்கு சென்னை நோக்கி 128 கிமீ வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருக்கிறது. மெயின் தண்டவாளத்தில் வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பஹாநகர் பகுதியில் வந்த போது சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்த லூப் லைனுக்கு செல்ல தவறாக சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மெயின் தண்டவாளத்தில் இருந்து லூப் லைனுக்கு அதே வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அங்கு நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ஜின் சரக்கு ரயில் மீது ஏறியது. பின்னால் இருந்த பெட்டிகள் அனைத்தும் தடம் புரண்டு அருகில் உள்ள மற்ற 3 தண்டவாளங்களில் கவிழ்ந்தன. இந்த நேரத்தில் 7.10 மணி அளவில் எதிர்திசையில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி 116 கிமீ வேகத்தில் இன்னொரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதிவேகமாக வந்து கொண்டு இருந்த ஹவுரா ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இதனால் ஏற்கனவே சரக்கு ரயில் மீது மோதியதால் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதியதால் தூக்கி வீசப்பட்டன. இதனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி 2 முதல் பி 9 வரை பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த இரண்டு ரயில்களிலும் 2 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். குறிப்பாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக பயணிகள் சென்றனர். இதனால் உயிர்பலி அதிகம் ஆகிவிட்டது. ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டி மற்றும் ஏ1 கோச்சில் இருந்து இன்ஜின் வரை உள்ள பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பயணித்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலரது உயிரை காவு வாங்கி விட்டது. அதுவும் மாலை 6.50 மணி முதல் இரவு 7.10 வரை வெறும் 20 நிமிடத்திற்குள் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

* முதற்கட்ட விசாரணை சொல்வது என்ன?
ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரயில் மீது மோதியிருக்கலாம். சிக்னல் மாற்றி கொடுத்தது தான் விபத்துக்கு காரணம் என்று கூறினாலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனுக்குள் நுழைந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதா அல்லது முதலில் தடம் புரண்டு, நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் மோதியதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 12841 க்கு சிக்னல் கொடுக்கப்பட்டு மெயின் லைனில் இருந்து மாறி, லூப் லைனுக்குள் நுழைந்து, அங்கு நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலுடன் மோதி, தடம் புரண்டது. அதே சமயம் ஹவுரா ரயில் எண் 12864 மெயின் லைன் வழியாக வந்து தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலில் 2 பெட்டிகள் தடம் புரண்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஹவுரா எக்ஸ்பிரசில் பெரிய பாதிப்பில்லை
சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதைத் தொடர்ந்து, அதன் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அவ்வழியாக சிறிது நேரத்தில் எதிர் திசையில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் கிடந்த பெட்டிகளில் மோதி தடம்புரண்டது. இதில் ஹவுரா எக்ஸ்பிரசில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்து யாரும் காயமடையவோ அல்லது இறக்கவோ இல்லை என ரயில்வே அதிகாரிகள் நேற்று உறுதி செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருந்த ஒரு சிலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் புறப்பட்ட சர் எம் விஷ்வேஸ்வரயா டெர்மினலில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 994 பயணிகளும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் 300 பேரும் பயணித்துள்ளனர். இதில் இன்ஜின் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மட்டுமே தடம்புரண்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

* ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு
ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

* போர்க்களமான மருத்துவமனைகள்
ரயில் விபத்தை தொடர்ந்து, பாலசோர் மாவட்ட மருத்துவமனை மற்றும் சோரோ மருத்துவமனை உள்ளிட்டவை போர்க்களம் போல் காட்சி அளித்தன. பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் மட்டுமே 526 பயணிகள் குவிந்தனர். இதனால் படுக்கைகள் இல்லாததால், ரத்த வெள்ளத்தில் பல பயணிகள் ஸ்ட்ரெச்சரிலும், தரையில் படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டனர். காயமடைந்த பலரும் வெளி மாநிலத்தவர்கள் என்பதால் மொழி புரியாமல் மருத்துவ ஊழியர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

பாலசோர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் மிருதுஞ்சய் மிஸ்ரா கூறுகையில், ‘‘வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்ததில்லை. திடீரென 251 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். எங்கள் மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் இரவு முழுவதும் விடிய விடிய முதலுதவி சிகிச்சை அளித்தனர்’’ என்றார். காயமடைந்தவர்கள் பாலசோர், சோரோ, பத்ரக், ஜாஜ்பூர் மருத்துவமனை மற்றும் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் கொண்டு வரப்பட்டதால், மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளிலும் ஏராளமான சடலங்கள் வெள்ளை துணி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பல உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள், காணாமல் போன தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தேடி பாலசோர் மருத்துவமனை மற்றும் சோரோவுக்கு விரைந்து வந்தனர்.

* புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பலி
விபத்தில் சிக்கிய ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயிலில் 1,516 பயணிகள் வரை பயணிக்கலாம். நேற்று 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த ரயிலில் பயணித்தனர். குறிப்பாக ரயிலின் இன்ஜின் பகுதிக்கு அடுத்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பயணித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம், பீகார் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* எய்ம்ஸ் குழு விரைந்தது
ரயில் விபத்து நடந்த இடத்தில் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக எய்ம்ஸ்-புவனேஸ்வரில் இருந்து மருத்துவர்கள் குழு ஒடிசாவின் பாலசோர் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். துயரமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவ உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

* மீட்பு பணிக்கு வந்த ராணுவம்
ராணுவ மருத்துவ மற்றும் பொறியாளர்கள் குழுவும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் விமானப்படையினர் 2 எம்ஐ 17 ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலமாக அருகாமை மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

* வரலாற்றின் கோர ரயில் விபத்துகள்
ஒடிசா ரயில் விபத்து, இந்திய வரலாற்றில் நடந்த கோர ரயில் விபத்துகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முன் நடந்த பயங்கர ரயில் விபத்துகள்:
ஜூன் 6, 1981: பீகாரின் பாக்மதி ஆற்றில் ரயில் கவிழ்ந்து 750 பயணிகள் பலியாகினர். இதுவே இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து.
1995, ஆக. 20: உபியின் பிரோசாபாத்தில் நின்றிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி 305 பயணிகள் உயிரிழந்தனர்.
1998, நவ. 26: பஞ்சாப்பின் கண்ணா பகுதியில் ஜம்மு தாவி சியால்டா எக்ஸ்பிரஸ், தடம்புரண்ட பிரண்டியர் கோல்டன் டெம்பிர் மெயில் ரயிலின் 3 பெட்டிகள் மீது மோதியதில் 212 பயணிகள் பலியாகினர்.
1999, ஆக. 2: பீகாரின் கதிஹார் டிவிசனில் உள்ள கைசல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது பிரம்மபுத்ரா மெயில் மோதியதில் 285க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் பலர் எல்லை பாதுகாப்பு படை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ராணுவத்தை சேர்ந்தவர்கள்.
2016, நவ. 20: கான்பூர் அருகே புக்ராயனில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் இறந்தனர்.
2002, செப். 9: ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பீகாரின் ரபிகஞ்சில் தாவே ஆற்று பாலத்தில் தடம் புரண்டதில் 140 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
1964, டிச. 23: ராமேஸ்வரத்தில் பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் சூறாவளியில் சிக்கி, அதில் பயணம் செய்த 126 பேர் உயிரிழந்தனர்.
2010, மே 28: மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் அருகே மும்பை செல்லும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

* விசாரணை ஆணையர் ரயில்வே நியமனம்
ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து தேசிய போக்குவரத்துக் கழகம் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ரயில்வே மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்திரி இந்த விசாரணையை தொடங்கி இருக்கிறார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பணிபுரிகிறார். இதுபோன்ற அனைத்து விபத்துகளையும் அவர் தான் விசாரிப்பார் என்று இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்தார். அவர் கூறுகையில்,’மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, ​​சீரமைப்புப் பணிகளைத் தொடங்குகிறோம். இந்த வழித்தடத்தில் கவாச் திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.

* 1200 பயணிகள் ஹவுரா வந்தனர்
ஒடிசா ரயில் விபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் படி 2 ரயில்கள் மூலம் 1,200 பயணிகள் நேற்று மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வந்தடைந்தனர். ஒரு ரயிலில் 1000 பயணிகளும், மற்றொரு ரயிலில் 200 பயணிகளும் கராக்பூர் மற்றம் ஹவுரா ரயில் நிலையங்களுக்கு வந்தடைந்தனர். ரயில் நிலையங்களில் அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

* 2 ரயில்களிலும் 2296 பயணிகள்
விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* ஒடிசா மருத்துவமனைகளில் 1116 பேருக்கு சிகிச்சை
ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள 21 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மொத்தம் 1116 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பாலாசோர் மருத்துவமனையில் 270 பேர், சோரோவில் 257 பேர், கோபால்பூரில் 196 பேர், கட்டாக்கில் 192 பேர், பதார்க்கில் 60 பேர், காந்தபாடாவில் 55 பேர், பாசுதேவ்பூரில் 31 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 172 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயர்மருத்துவமனைக்கு 390 பேரும், உயர்தர சிகிச்சைக்கு 495 பேரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

* ரயில் இன்ஜின் டிரைவர்கள் படுகாயம்
ஒடிசா ரயில் விபத்தில் கோரமண்டல் மற்றும் ஹவுரா ரயில் இன்ஜின் டிரைவர்கள், கார்டுகள் காயம் அடைந்துள்ளனர். அதே சமயம் சரக்கு ரயில் டிரைவர், கார்டு காயம் இல்லாமல் தப்பினர். காயம் அடைந்த 2 ரயில் இன்ஜின் டிரைவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* 178 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்
கோரமண்டல் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த 178 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 110 பேர் விசாகப்பட்டினத்திலும், 26 பேர் ராஜாமகேந்திராவரத்திலும், ஒருவர் தாடேபள்ளிகுடத்திலும், 2 பேர் ஏலூரிலும், 39 பேர் விஜயவாடாவிலும் இறங்குவதாக இருந்தது. இந்த 178 பேரில் 110 பேர் 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்துள்ளனர். 38 பேர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியிலும், 17 பேர் இரண்டடுக்கு ஏசி பெட்டியிலும், 9 பேர் முதல்வகுப்பு ஏசி பெட்டியிலும் முன்பதிவு செய்து உள்ளனர். பொதுப்பெட்டியில் வந்தவர்கள் விவரம் தெரியவில்லை.

* 48 ரயில்கள் ரத்து 39 ரயில்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன
ஒடிசா ரயில் விபத்து காரணமாக நேற்று 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னை-ஹவுரா மெயில், தர்பங்கா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், காமகயா-எல்டிடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் கோரமண்டல் ரயில் ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மீட்பு பணி நிறைவு
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் 300க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பெரிய உலோக கட்டர்கள், கனரக தூக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் 9 குழுக்களாக பிரிந்து கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்டனர். உலோக கட்டர்கள் மூலம் கவிழ்ந்த பெட்டிகளின் மேற்பகுதியை வெட்டி அகற்றினர். அதிலிருந்து பலரது உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கே விபத்து பகுதியை அடைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளை செய்தனர். நேற்று மாலையுடன் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக மீட்பு படையின் ஜெனரல் அதுல் கர்வால் தெரிவித்தார்.

* ‘அந்த மனசு தான் கடவுள்’ ரத்ததானம் செய்த 2,000 இளைஞர்கள்
ரயில் விபத்தை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். பலரும் படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் அவர்களுக்கு ரத்தம் கொடுக்க ஏராளமான உள்ளூர் இளைஞர்களும் மருத்துவமனைகளில் குவிந்தனர். பாலசோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவோடு இரவாக தன்னார்வலர்கள், இளைஞர்கள், போலீசார் என சுமார் 2,000 பேர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்து பலரின் உயிரை காப்பாற்ற உதவினர். 60 வயதான அசோக் பெரோ என்ற முதியவரும் ரத்ததானம் செய்ய முன்வந்தார்.

அவர் கூறுகையில், ‘‘வயதாகி விட்டதால் என்னால் ரத்ததானம் தர முடியாது என மருத்துவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் எனது மகன்கள், உறவினர்களை ரத்ததானம் செய்ய அனுப்பி வைத்தேன். விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளில் பலர் அவர்களின் செல்போனை தொலைத்திருந்தனர். இதனால் என் செல்போன் மூலமாக அவர்களின் உறவினர்களுக்கு போன் செய்து தகவல் கூறி வருமாறு அழைத்தேன்’’ என்றார். ஒரே இரவில் 3000 யூனிட் ரத்ததானம் பெறப்பட்டதாகவும் அதற்காக ரத்ததானம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

* ஹீரோவாக மாறிய உள்ளூர் மக்கள்
விபத்து நடந்ததும் முதல் நபராக மீட்பு பணியில் களமிறங்கி பல உயிர்களை காப்பாற்றியவர்களும் உள்ளூர் மக்கள்தான். விபத்து நடந்த அடுத்த நிமிடமே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசுக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். மீட்பு குழு வரும் முன்பாக கவிழ்ந்த பெட்டிகளிலிருந்து பலரையும் வெளியில் கொண்டு வந்து, அவர்களின் உடைமைகளை எடுத்து கொடுத்து தண்ணீர் வழங்கி உதவினர். விபத்து நடந்த பஹநாகா பஜார் ரயில் நிலையத்தின் அருகே வசிக்கும் ராணாஜித் கிரி கூறுகையில், ‘‘இரவு 7 மணி அளவில் டீக்கடையில் நின்றிருந்தோம். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. விரைந்து சென்று பார்த்த போது ரயில் கவிழ்ந்து கிடந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வெளியில் வந்த பயணிகளை மீட்டோம். நாங்களே சுமார் 50 பேரை மீட்டிருப்போம். காயமடைந்தவர்களை எங்கள் சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தோம். பலரது பெட்டி, உடைமைகளை எடுத்து தந்து உதவினோம்’’ என்றார்.

You may also like

Leave a Comment

fifteen + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi